Tuesday 14 October, 2008

ஏழை பசி உணவு உயிர்







பசியின் தத்துவம்.

ஜீவர்களுக்கு பசி என்னும் ஒன்றைக் கடவுள் ஏற்படுத்தி உள்ளதில் தான் - ஒரு பெரிய தத்துவம் அடங்கி இருக்கின்றது. உடம்பில் உயிர்ச்சக்தி இருந்து கொண்டு, ஜீவ களையோடு கூடிய புற வளர்ச்சிக்கும் (சிவ களை அல்லது) அறிவு விளக்கத்திற்கும் காரணமாய் இருக்கின்றதாம். இந்த உயிர்ச் சக்தியில்தான் கடவுள் தத்துவம் - பசியின் வண்ணமாக வெளிப்பட்டுள்ளது.

உயிர்ச் சக்தியில் நிறை அருள் அமுதம் வெளிப்பட்டிலங்கும் போது ஆனந்த வடிவாகக் கேடின்றி விளங்குவான் மனிதன்.

இவ்வருள் அமுதம் கிடைக்கப் பெறாத வரை புற உணவுச் சக்தியால் தான் உயிர் விளங்குகின்றது. இவ் உணவால் ஏற்படும் உயிர்ச் சக்தி குறைபாடுடையது. அடுத்தடுத்துத் தினமும் உணவு ஏற்று உயிர் விளக்கத்தைத் தூண்டி விட்டுக் கொண்டே இருக்க வேண்டியுள்ளதாம்.

பசிக்கு உணவு

அப்படி உணவு வழங்கப் பெறாத போதுதான் உயிர்ச்சக்தி மங்குகின்றது. உடலிற் சோர்வு ஏற்படுகின்றதும். பொறி புலன்களின் விளக்கம் குன்றுகின்றது. உள்ளுணர்வு தடுமாறுகின்றது. அறிவு அனுபவமும் சுருங்குகின்றது. இவை தான் பசியின் செயலாக அறியப்படும்.

இந்தப் பசியை ஒழிப்பதற்கு ஆகாரம் ஏற்பது தான் முறையாக உள்ளது. மற்ற எந்தவித தந்திர உபாயங்களாலும் பசியை நீக்கிக் கொண்டு வாழ முடியாதாம்.

பசியின் கொடுஞ் செயல்களை உணர்ந்தும், அதன் ஆற்றலைப் பொறுக்க முடியாமலும், மனிதன் எதையும் செய்யத் துணிந்து விடுகின்றான். உயிரையே கூட அலட்சியப் படுத்திவிடும் நிலைக்கு வந்து விடுகின்றான்.

இப்படிப்பட்ட பசியை, உணவினால் மாற்றி விட்டு, உள்ளும் புறமும் ஒளி பெறச் செய்து விடுவதுதான் ஜீவகாருண்யத்தின் அருஞ் செயலாக இருக்கின்றது. பசி என்னும் ஒன்று இல்லையானால், இந்த ஜீவகாருண்யச் செயலுக்கே இடமில்லாது போகும்.

இதிலிருந்து, ஜீவகாருண்யத்தின் மேன்மையும் அதனை ஒவ்வொரு சன்மார்க்கியும், தனது வாழ்வில் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியமும், உணரப்படலாகின்றது.


























No comments:

தமிழில் எழுதுங்கள்