Tuesday 14 October, 2008

பில்கேட்ஸ் ஒரு சகாப்தம்


பில் கேட்ஸ் என்று உலகெங்கும் அறியப்படும் கணினி மென்பொருள் விற்பன்னர். மைக்ரோசாஃப்ட் என்னும் மாபெரும் கணினி மென்பொருள் நிறுவனத்தை உருவாக்கியவர். தனது 52-வது வயதில், இன்றுடன் தனது தினசரி அலுவல்களிலிருந்து ஓய்வு பெறுகிறார். தன்னிடம் இருக்கும் மைக்ரோசாஃப்ட் பங்குகளின் காரணமாக நிறுவனத்தின் non-executive chairman-ஆகத் தொடர்ந்து இருப்பார்.பில் கேட்ஸ்மீது பலருக்கு தீராக் காதலும் மிச்சம் உள்ளவர்களுக்கு கடும் வெறுப்பும் உண்டு. தசாவதாரம் படம் பார்த்தவர்கள் மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்களேன்.பில் கேட்ஸ் கணினி மென்பொருள் எழுதுவதில் மாபெரும் மேதை என்று சொல்லமுடியாது. கணினி இயக்குதளங்கள், நிரல் மொழிகள், மென்பொருள் பேக்கேஜ்கள், கணினி உலகில் புதுச் சிந்தனைகள் என்று எதுவும் இவரிடமிருந்து வந்தது கிடையாது.இவரது வெற்றியின் ரகசியம், விடாமுயற்சி, தளராமை, எப்படியாவது ஜெயிக்கவேண்டும் என்ற வெறி. பிறரது உழைப்பையும் பிறரது சிந்தனைகளையும் தனதாக்கிக்கொண்டு அவற்றுக்கு விற்பனை முலாம் பூசி, வர்த்தக அளவில் பெரும் சாதனை புரிந்தவர்.ஐ.பி.எம் நிறுவனம் செய்த சில தவறுகளால் பில் கேட்ஸுக்கு அடித்தது லக்கி பிரைஸ். தொடர்ந்து அவர் தவறுகள் செய்தபோதெல்லாம், பிறர் அந்தத் தவறுகளைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ளாததால் அவருக்கு இன்றுவரை அதிர்ஷ்டம் தொடர்ந்துள்ளது.இன்று மைக்ரோசாஃப்ட் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பல.முதலாவதாக கூகிள் என்னும் அதிவேகமாக வளரும் இணையச் சேவை நிறுவனம். கணினி என்பது நிஜமாகவே வெறும் ஜன்னல்போலத்தான் என்பதை நிரூபித்துள்ள நிறுவனம். ஜன்னலுக்குப் பின்புலத்தில் கணினியின் இயக்குதளமோ, மென்பொருள்களே அவசியமே இல்லை, தடியான ஓர் இணையக் குழாய் போதும் என்கிறது கூகிள். அப்படியென்றால் மைக்ரோசாஃப்ட் ஒரு டம்மி. கூகிள் நினைப்பதுமட்டும் நடந்துவிட்டால் மைக்ரோசாஃப்ட் காலியாகிவிடும்.இரண்டாவது இணையச் சேவை வழங்கிகள் துறையில் லினக்ஸ் பெற்றிருக்கும் பெரு வெற்றி. கூகிள் மேசைக்கணினிகளைத் தள்ளிக்கொண்டு போய்விடும் என்றால் மறுபக்கம் பல்வேறு இணையச் சேவைகளை வழங்குவதில் மைக்ரோசாஃப்டுக்குக் கடும் சவாலை அளிக்கிறது முற்றிலும் இலவசமான லினக்ஸ் இயக்குதளம். இந்தத் துறையில் மைக்ரோசாஃப்டுக்கு முன்னோடி யூனிக்ஸ் சேவை வழங்கிகளும் அதன் குழந்தையான லினக்ஸும். மைரோசாஃப்ட் அதற்குப் பின்னே சேவை வழங்கிகளை உருவாக்கத் தொடங்கினார்கள். ஆனால் செயல்திறனில் இவை லினக்ஸ் அருகே நெருங்கக்கூட முடியாது என்பது என் தனிப்பட்ட கருத்து. ஆனாலும் தனது சந்தைப்படுத்தும் திறனால் மைக்ரோசாஃப்ட் இங்கேயும் நிறையப் பணம் பண்ணுகிறது. இது தொடருமா என்பது பெரும் சந்தேகமே.மூன்றாவது, கணினி சம்பந்தப்பட்டதே அல்ல. இன்று கையடக்கமான செல்பேசிகள் கணினி செய்யும் பலவற்றைச் செய்யத் தொடங்கியுள்ளன. இங்கு விரைவில் நோக்கியா வசமாகப்போகும், ஓப்பன் சோர்ஸாகவும் ஆகப்போகும் சிம்பயான் இயக்குதளம் முன்னணியில் உள்ளது. மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் இந்தவகை செல்பேசிகளில் மிகக் குறைவான அளவே உள்ளது. சந்தையில் சதவிகிதத்தை அதிகரிக்க மைக்ரோசாஃப்டால் முடியும் என்று தோன்றவில்லை.நான்காவது, கேளிக்கை சம்பந்தப்பட்டது. ஆப்பிளின் ஐபாட், அடுத்து ஐஃபோன் ஆகியவை மக்கள் மனத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மைக்ரோசாஃப்டிடமிருந்து இதைப்போன்ற ஒரு யோசனை வரவில்லை.மற்றவர் செய்வதை உடனடியாகப் பார்த்து காப்பியடித்து வெற்றிபெறும் மைக்ரோசாஃப்ட், நான்கு பக்கமும் நெருக்கடி ஏற்படும்போது யாரை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் குழம்புகிறது.பில் கேட்ஸ் உருவாக்கி வைத்துள்ள கணினி சாம்ராஜ்யத்தைக் கட்டிக் காப்பது எளிதான விஷயமல்ல. நான்கு பக்கத்திலிருந்தும் நான்கு படைகள் முற்றுகையிடுகின்றன. அதைத்தவிர ஃபேஸ்புக், மைஸ்பேஸ், கூகிளின் ஆர்க்குட், ட்விட்டர் என்று புதிய புதிய விஷ சர்ப்பங்கள் முளைத்து பயமுறுத்துகின்றன.ஆனாலும் இதையெல்லாம் மீறி, இன்று மைக்ரோசாஃப்ட் தனது மென்பொருள்களையும் இயக்குதளங்களையும் விற்று பெரும் காசு பார்க்கிறது. இது எத்தனை நாள்களுக்குத் தாங்கும் என்று தெரியாவிட்டாலும்கூட, இன்றும் வருமானம், லாபம் ஆகியவற்றைப் பார்க்கும்போது மைக்ரோசாஃப்ட் அளவுக்குப் பெரிய நிறுவனம் இந்தத் துறையில் இல்லை.ராஜ பரம்பரைகளில் ஒரு குறிப்பிட்ட ராஜாவின் பெயர் தனியாக நிற்கும். அவரது காலத்தில் மிகப்பெரும் உன்னத நிலையை அடைந்தபிறகு அந்த சாம்ராஜ்யம் அடுத்த சிலரது ஆட்சியில் வீழ்ச்சியைச் சந்திக்க ஆரம்பிக்கும். ஒரு ராஜராஜனுக்குப் பிறகு சோழ சாம்ராஜ்யமும், நரசிம்மவர்மனுக்குப் பிறகு பல்லவ சாம்ராஜ்யமும்போல.பில் கேட்ஸும் மைக்ரோசாஃப்ட் சாம்ராஜ்யமும்கூட அப்படித்தான் என்பது என் கருத்து.

No comments:

தமிழில் எழுதுங்கள்