Tuesday 14 October, 2008

தங்க பறவை


தங்கப் பறவை
(Grimms' Fairy Tales, The Golden Bird, abridged and retold by Badri)ஒரு ராஜாவின் அழகான தோட்டத்தில் தங்க ஆப்பிள் காய்க்கும் அற்புதமான மரம் ஒன்று இருந்ததாம். அந்த மரத்தில் உள்ள தங்க ஆப்பிள்களை எண்ணி கணக்கு பார்த்து வைத்திருப்பார்கள். ஆனால் பழங்கள் பழுக்க ஆரம்பித்த நேரம், நாள் ஒன்றுக்கு ஒன்றாக ஒரு தங்க ஆப்பிள் காணாமல்போகத் தொடங்கியது.ராஜாவுக்கு ஒரே கோபம். தோட்டக்காரனைக் கூப்பிட்டு கடுமையாகத் திட்டினார். தோட்டக்காரன், தனது முதல் மகனைக் கூப்பிட்டு, “ராத்திரி தூங்காமல் கவனமாகப் பார். யார் திருடிக்கொண்டு போகிறானோ அவனைப் பிடித்துவிடவேண்டும்” என்றான்.அன்று இரவு சரியாகப் பன்னிரண்டு மணி ஆகும்போது காவலுக்கு உட்கார்ந்திருக்கும் முதல் மகன் தூக்கத்தில் ஆழ்ந்தான். அன்றும் ஒரு தங்க ஆப்பிள் காணாமல் போனது. அடுத்த நாள் தோட்டக்காரன் தனது இரண்டாவது மகனைக் காவலுக்கு அனுப்பினான். அன்றும் நடு இரவில், இரண்டாவது மகனும் தூங்க, அன்றும் ஓர் ஆப்பிள் காலி. தோட்டக்காரனுக்கு மூன்றாவது மகன் ஒருவன் இருந்தான். சிறியவன். எனவே தோட்டக்காரன் அவனைக் காவலுக்கு அனுப்ப விரும்பவில்லை. ஆனாலும் மூன்றாவது மகனது நச்சரிப்பைத் தாங்கமாட்டாமல் அனுப்பிவைத்தான்.அன்று இரவு, மூன்றாவது மகன் தூங்காமல் காவல் காத்தான். நள்ளிரவில் தங்கத்தான் ஆன ஒரு பறவை பறந்து வந்து, தங்க ஆப்பிளைக் கொத்தியது. மூன்றாவது மகன் அந்தப் பறவையை நோக்கி அம்பை எய்தான். ஆனால் தங்கப் பறவை தப்பியோடியது. அதன் ஓர் இறகு - முழுவதும் தங்கத்தால் ஆனது - மட்டும் கீழே விழுந்தது.அடுத்த நாள் அந்தத் தங்க இறகை ராஜாவிடம் காட்டினார்கள். ராஜா அந்தப் பறவையை உயிருடன் பிடித்துக்கொண்டுவருமாறு கட்டளையிட்டார். தோட்டக்காரனின் முதல் மகன் கிளம்பினான். காட்டுக்குள் செல்லும்போது அங்கே ஒரு நரி உட்கார்ந்திருந்தது. அதை அம்பு எய்திக் கொல்ல, குறிவைத்தான். உடனே நரி, “என்னைக் கொல்லாதே. நீ தங்கப் பறவையைப் பிடிக்க இங்கே வந்திருக்கிறாய் என்று எனக்குத் தெரியும். இப்படியே நடந்தால் மாலையில் ஒரு கிராமத்தை அடைவாய். அங்கே இரண்டு தங்கும் விடுதிகள் எதிரெதிராக இருக்கும். அதில் ஒன்று அழகாகவும் வசதியாகவும் இருக்கும். மற்றொன்று குப்பையாகவும் மோசமாகவும் இருக்கும். அதில் மோசமானதில் தங்கு” என்றது.இந்த நரிக்கு என்ன தெரியும் என்று எகத்தாளத்துடன் முதல் மகன் அதை நோக்கி அம்பை எய்தான். ஆனால் அம்பு குறிமீது படவில்லை. நரி தப்பியோடியது.அன்று மாலை நரி சொன்னதுபோன்றே ஒரு கிராமத்தை அடைந்த அவன், மோசமான விடுதிக்குள் நுழைவது பைத்தியக்காரத்தனம் என்று எண்ணி, அழகான விடுதிக்குள் நுழைந்தான். அங்கே இஷ்டத்துக்கு சாப்பாடு, மது என்று சந்தோஷமாக நாள்களைக் கழிக்க ஆரம்பித்தான். தங்கப் பறவையை மறந்தான். தன்னை மறந்தான்.வெகு நாள்களாகியும் முதல் மகன் வரவில்லை என்றதும் இரண்டாவது மகன் கிளம்பினான். அவனும் நரியைச் சந்தித்தான். அது கொடுத்த அறிவுரையை அவனும் சட்டை செய்யவில்லை. தன் அண்ணனைப் போலவே நரியைத் தீர்த்துக்கட்ட முயற்சி செய்தான். நரி தப்பித்து ஓடியது. அன்று மாலை, அவனும் அழகான விடுதிக்குள் நுழைந்து முதல் மகனைப் போன்றே தன்னை மறந்து குடி, விருந்தில் காலத்தைக் கழித்தான்.மேலும் பல நாள்கள் ஆகின. கடைசி மகன் தான் செல்வதாகச் சொன்னான். ஆனால் தந்தை முதலில் மறுத்தார். பின்னர், வெறுவழியின்றி அனுப்பிவைத்தார். அவனும் காட்டுக்குள் நரியைச் சந்தித்தான். ஆனால் தனது சகோதரர்களைப் போலன்றி, நரியின் அறிவுரையை காதுகொடுத்துக் கேட்டான். மேலும் நரியைத் தீர்த்துக்கட்ட நினைக்கவில்லை. இதனால் நரி அவனைத் தனது வாலில் உட்கார்ந்துகொள்ளச் சொன்னது. அவனது தலைமுடி விஷ்ஷென்று சத்தமிட, பயங்கர வேகத்தில் பறந்தனர். பக்கத்து கிராமத்தை அடைந்தனர். அங்கே நரியின் அறிவுரையைப் பின்பற்றி மோசமான விடுதிக்குள் நுழைந்தான் அவன். இரவு முழுதும் அங்கேயே தங்கினான். அடுத்த நாள் காலை, நரி அவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தது. “இங்கேயிருந்து கிளம்பி நேராகப் போனால் ஒரு கோட்டை வரும். அங்கே பல சிப்பாய்கள் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருப்பார்கள். அவர்களைக் கண்டுகொள்ளாதே. உள்ளே சென்றால் ஒரு மரக்கூண்டில் தங்கப் பறவை இருக்கும். பக்கத்திலேயே மிக அழகான தங்கக் கூண்டு ஒன்றும் இருக்கும். அதனைக் கண்டுகொள்ளாதே. கட்டாயமாக தங்கப் பறவையை எடுத்து தங்கக் கூண்டில் வைக்காதே. அப்படிச் செய்தால் நீ வருத்தப்படவேண்டியிருக்கும். மரக்கூண்டிலேயே வைத்து தங்கப் பறவையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடு” என்றது நரி. அவன் மீண்டும் நரியின் வாலில் ஏறிக்கொள்ள, தலைமுடி விஷ்ஷென்று சத்தமிட, பயங்கர வேகத்தில் பறந்து கோட்டையை அடைந்தனர்.கோட்டையில் எல்லாமே நரி சொன்னமாதிரியே இருந்தது. அங்கே மரக்கூண்டுக்குள் தங்கப் பறவை இருந்தது. பக்கத்தில் ஒரு தங்கக் கூண்டும் இருந்தது. அருகில் தோட்டத்திலிருந்து எடுத்துவந்திருந்த மூன்று தங்க ஆப்பிள்களும் இருந்தன. “சே, இந்த அழகான தங்கப் பறவையை, வெறும் மரக்கூண்டிலா எடுத்துக்கொண்டு செல்லவேண்டும்” என்று எண்ணி, அவன் கூண்டைத் திறந்து பறவையைப் பிடித்து தங்கக் கூண்டுக்குள் வைத்தான். உடனே தங்கப் பறவை பயங்கரமாகக் கத்தியது. சிப்பாய்கள் அனைவரும் விழித்துக்கொண்டு ஓடிவந்து அவனைக் கைதுசெய்தார்கள்.கைது செய்து, அவனை ராஜாவிடம் கொண்டுபோய் நிறுத்தினார்கள். அவர் அவனுக்கு மரண தண்டனை கொடுத்தார். ஆனால், காற்றைப் போலப் பறக்கும் ராஜாவின் தங்கக் குதிரை காணாமல்போயிருந்தது. அதனைக் கண்டுபிடித்துக் கொடுத்தால், தங்கப் பறவையை அவனுக்கே தந்துவிடுவதாக அந்த ராஜா சொன்னார்.மிகுந்த துக்கத்துடன் மூன்றாவது மகன், ராஜாவின் தங்கக் குதிரையைத் தேடிக் கிளம்பினான். தன் விதியை நொந்துகொண்டான். நரி சொன்னபடி செய்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காதே என்று அவனுக்குத் தோன்றியது. அப்போது நரி அங்கு வந்தது. “பார்த்தாயா, நான் சொன்னதை நீ ஏன் கேட்கவில்லை? பரவாயில்லை. நான் உனக்கு மீண்டும் நல்லதைச் செய்கிறேன். ஆனால் நான் சொல்வதை அப்படியே செய்யவேண்டும். இங்கிருந்து போனால் ஒரு கோட்டை வரும். அங்கே லாயத்தில் தங்கக் குதிரை இருக்கும். அதனருகில் குதிரைக்காரன் தூங்கிக்கொண்டிருப்பான். குதிரையின் முதுகில் தோலால் ஆன சேணம் பூட்டப்பட்டிருக்கும். பக்கத்திலேயே தங்கச் சேணம் ஒன்றும் இருக்கும். அதனைத் தொடாதே. தோல் சேணத்துடனேயே குதிரையை அழைத்துக்கொண்டு வந்துவிடு” என்றது. நரி மீண்டும் தன் வாலை நீட்ட, அவன் அதில் ஏறி உட்கார்ந்துகொண்டான். தலைமுடி விஷ்ஷென்று சத்தமிட, பயங்கர வேகத்தில் பறந்து கோட்டையை அடைந்தனர்.நரி சொன்னதுபோலவே அனைத்தும் இருந்தன. “சே, இந்த அழகான குதிரைக்கு வெறும் தோல் சேணமா? இதற்கு தங்கச் சேணத்தைப் பூட்டுவோம்” என்று அதனை எடுத்து குதிரையின் முதுகில் போட்டான். உடனே குதிரைக்காரன் விழித்துக்கொண்டு சத்தம்போட, காவலர்கள் ஓடிவந்து அவனைக் கைதுசெய்தனர்.அடுத்த நாள் அந்த ராஜாவும் அவனுக்கு மரண தண்டனை விதித்தார். ஆனால், அழகான இளவரசி ஒருத்தியைக் கண்டுபிடித்து கொண்டுவந்து கொடுத்தால் அவனது தண்டனையை ரத்துசெய்து, கூடவே தங்கக் குதிரையையும் தங்கப் பறவையையும் கொடுப்பதாகச் சொன்னார்.மிகவும் வருத்தத்துடன் அவன் நடக்க ஆரம்பித்தபோது நரி மீண்டும் அங்கு வந்தது. “ஏன் இப்படி சொல்பேச்சு கேட்கமாட்டேன் என்கிறாய்? பார்த்தாயா என்ன நடந்தது என்று? சரி, கடைசியாக மீண்டும் ஒருமுறை உனக்கு அறிவுரை தருகிறேன். உன்னை ஒரு கோட்டைக்கு அழைத்துச் செல்வேன். அங்கே நடு நிசியில் இளவரசி குளிக்கவருவாள். நேராகச் சென்று அவளை முத்தமிடு. அவள் உன்னுடன் கிளம்பிவிடுவாள். ஆனால் கவனம் தேவை. அவள் தன் தாயையும் தந்தையையும் பார்க்கவேண்டும் என்பாள். அதற்குமட்டும் சம்மதிக்காதே” என்றது நரி. நரி வாலில் அமர்ந்து, தலைமுடி விஷ்ஷென்று சத்தமிட, பயங்கர வேகத்தில் பறந்து அந்தக் கோட்டையை அடைந்தனர்.நரி சொன்னதுபோலவே நடந்தது. அவன் இளவரசியை முத்தமிட, அவள் அவனுடன் ஓடிப்போக சம்மதம் தெரிவித்தாள். ஆனால் தாய், தந்தையை ஒருமுறை பார்த்துவிட அனுமதி கேட்டாள். அவன் முதலில் மறுத்தான். ஆனால் அவள் விடாது அவன் காலில் விழுந்து, கெஞ்சி, ஓவென்று அழ, கடைசியாக அவளுக்கு அனுமதிகொடுத்தான். அவள் தன் வீட்டை நெருங்கியதும் காவலர்கள் ஓடிவந்து அவனைக் கைதுசெய்தனர்.அந்த ராஜா, அவனிடம் “என் ஜன்னலுக்கு வெளியே உள்ள மலை என் பார்வையைத் தடுக்கிறது. அடுத்த எட்டு நாள்களில் அந்த மலையைத் தரைமட்டமாக்கினால் என் பெண்ணை உனக்குக் கொடுக்கிறேன். இல்லாவிட்டால் மரணம்தான்” என்றார்.அந்த மலையை எப்படி உடைப்பது. ஏழு நாள்கள் வேலை செய்தும் ஒரு அங்குலம்கூடக் குறையவில்லை. அன்று நரி மீண்டும் அங்கு வந்தது. “போ, போய்ப் படுத்துக்கொள், நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றது. அடுத்த நாள் காலை எழுந்துபார்த்தால், நரி மலையைத் தரைமட்டமாக்கியிருந்தது. ராஜாவும் வேறு வழியில்லாமல் இளவரசியைக் கொடுக்கவேண்டியிருந்தது.அவன் இளவரசியை அழைத்துக்கொண்டு கிளம்பினான். நரி அவனிடம் வந்து ஒரு யோசனை சொன்னது. “நான் சொன்னபடி நடந்தால் உனக்கு இளவரசி, குதிரை, பறவை எல்லாமே கிடைக்கும்” என்றது. “அதெப்படி முடியும்?” என்றான் அவன். “நான் சொல்வதைமட்டும் நீ கேட்டால் போதும். அதுதான் மாட்டேன் என்கிறாயா” என்றது நரி. “இந்த முறை நீ சொல்வதை அப்படியே செய்கிறான்” என்றான் அவன்.“இளவரசியை அழைத்துக்கொண்டுபோய் அந்த ராஜாவிடம் கொடு. அவன் குதிரையைக் கொடுப்பான். கிளம்பும்போது எல்லோருக்கும் கை கொடு. ஆனால் இளவரசியிடம் கடைசியாகச் செல். அவளுக்குக் கைகொடுக்கும்போது சரேலென அவளைத் தூக்கி குதிரையில் வைத்துக்கொண்டு கிளம்பு. குதிரை காற்றுவேகத்தில் செல்லும் என்பதால் யாராலும் உன்னைப் பிடிக்கமுடியாது” என்றது நரி.இம்முறை நரி சொன்னதுபோல நடந்துகொண்டான் அவன். இளவரசியுடன் தங்கக் குதிரையில் பறந்து வெளியேறியவன் சிறிது தூரம் சென்று நரியை மீண்டும் சந்தித்தான்.“நானும் இளவரசியும் வாசலில் நிற்போம். நீ அடுத்த ராஜாவிடம் போய், குதிரையைக் காண்பி. ஆனால் குதிரையிலிருந்து இறங்காதே. ராஜா, அது தங்கக் குதிரைதான் என்பதைத் தெரிந்துகொண்டதும் தங்கப் பறவையைத் தருவான். அது சரியான பறவைதானா என்பதைப் பரிசீலிக்கவேண்டும் என்று சொல்லி குதிரையின்மீதே அமர்ந்திரு. உன் கையில் பறவையைக் கொடுத்ததும் உடனே குதிரையைத் தட்டிக் கிளப்பி, வெளியேறு” என்றது நரி.இங்கும் நரி சொன்னபடியே நடந்தது. இவ்வாறாக தங்கப் பறவை, தங்கக் குதிரை, இளவரசி ஆகியோரோடு அவன் வெளியேறினான். நரி அவனிடம் மீண்டும் வந்தது. “இப்போது என்னைக் கொன்று என் கால்களையும் தலையையும் வெட்டிப்போடு” என்றது. அவன் மறுத்துவிட்டான். “சரி, நான் தொடர்ந்து உனக்கு நல்ல அறிவுரைகளாகவே சொல்லிவருவேன். இங்கிருந்து வீட்டுக்குப் போகும் வழியில் மரணதண்டனைக் கைதிகள் யாருக்கும் பிணை கொடுத்து விடுவிக்காதே. ஆற்றங்கரையில் உட்காராதே” என்று சொல்லிவிட்டுச் சென்றது நரி. “அது ஒன்னும் அவ்வளவு கஷ்டமில்லை” என்று நினைத்துக்கொண்டான் அவன்.அங்கிருந்து இளவரசியுடனும் தங்கக் குதிரை/பறவையுடனும் செல்லும் வழியில் தன் இரு சகோதரர்கள் தங்கிவிட்ட கிராமத்துக்கு வந்தான். அங்கே அவனது சகோதரர்கள் வழிப்பறிக் கொள்ளையர்களாக மாறியிருந்தனர். அவர்கள் பிடிபட்டு, மரணதண்டனைக் கைதிகளாக இருந்தனர். மூன்றாவது மகன் தன் சகோதரர்களை மீட்கவேண்டி அந்த கிராமத்தவர் கேட்ட பிணைத்தொகையைக் கொடுத்தான். நரி சொன்ன அறிவுரையைக் கேட்காமல் மீண்டும் மீறினான். தன் சகோதரர்களையும் அழைத்துக்கொண்டு கட்டுவழியாக வீட்டை நோக்கிப் புறப்பட்டான்.காட்டு வழியாகச் செல்லும்போது ஓர் ஆற்றங்கரையில் அமர்ந்து சாப்பிடலாம் என்று சகோதரர்கள் சொன்னார்கள். மீண்டும் நரி சொன்னதைக் கேட்காமல் மூன்றாவது மகன் உட்கார, அவனது சகோதரர்கள் அவன் பின் வந்து அவனைத் தண்ணீரில் பிடித்துத் தள்ளிவிட்டனர். பிறகு அவர்கள், இளவரசி, தங்கக் குதிரை, தங்கப் பறவை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ஊர் திரும்பினர். தங்களது ராஜாவிடம் அனைத்தையும் சென்று காட்டி, தங்களது திறமையால்தான் இத்தனையும் கிடைத்தது என்றனர். அனைவருக்கும் மகிழ்ச்சி. ஆனால் குதிரை சாப்பிட மறுத்தது; பறவை பாட மறுத்தது; இளவரசி அழுதுகொண்டே இருந்தாள்.இதற்கிடையில், ஆற்றில் தள்ளப்பட்ட மூன்றாவது மகன் உயிர் போகவில்லை. நரி மீண்டும் அங்கு வந்தது. “சொல்லச் சொல்லக் கேட்காமல் இப்படிச் செய்கிறாயே. ஆனாலும் உன்னை அப்படியே விட எனக்கு மனதில்லை. என் வாலைப் பிடித்துக்கொள். உன்னை மேலே தூக்கிவிடுகிறேன்” என்றது. அவன் பிடித்துக்கொள்ள, அவனைக் கரைக்கு இழுத்தது. “நீ ஊருக்கு வந்தால் உன்னைக் கொலைசெய்ய உனது சகோதரர்கள் ஆட்களை அமர்த்தியுள்ளனர்” என்றது நரி. எனவே அவன் ஓர் ஏழை குடியானவனாக மாறுவேடம் போட்டுக்கொண்டு ராஜசபைக்கு வந்தான்.அவன் உள்ளே நுழைந்ததுமே தங்கக் குதிரை சாப்பிட ஆரம்பித்தது; தங்கப் பறவை பாட்டு பாடியது; இளவரசி அழுகையை நிறுத்தினாள். அவன் அரசனிடம் சென்று நடந்தது அனைத்தையும் சொன்னான். அரசன் இரண்டு கெட்ட சகோதரர்களையும் பிடித்து சிறையில் அடைத்தான். இளவரசியை மூன்றாவது மகனுக்கு மணம் செய்வித்தான். ராஜா இறந்ததும் அந்த ராஜ்ஜியமும் அவனுக்கே கிடைத்தது.பல ஆண்டுகளுக்குப் பிறகு அவன் காட்டுக்குச் செல்லும்போது நரி அங்கே மீண்டும் வந்து தன்னை வெட்டிப்போடுமாறு கேட்டுக்கொண்டது. அவன் அவ்வாறு செய்ய, நரி ஒரு மனிதனாக மாறியது. அந்த நரி, இளவரசியின் சகோதரன். ஏதோ மந்திரத்தால் இப்படி நரியாக மாறியிருந்தானாம்.

No comments:

தமிழில் எழுதுங்கள்