Tuesday 14 October, 2008

மனசுக்குள் மரணம்


எனக்கு இது அதிசயமாக – ஆச்சர்யமாக – நம்பமுடியாததாக இருந்தது. இது, இன்றைக்கு மட்டுமில்லை. கடந்த சில வாரங்களின், சில நாட்களிலும் இப்படித்தான்...ஸாரி... என்ன விஷயமென்றே கூறாமல் பேச்சை வளர்க்கிறேன் அல்லவா?போன மாதத் துவக்கத்தில் ஒருநாள். காலை உறக்கம் கலைந்து எழுமுன், எழ மனமின்றி ஹாயாக கண்ணயருவோமே, அப்படிப்பட்ட கணத்தில் என் கனவில் – கனவென்றும் கூற முடியுமா தெரியவில்லை – ஒரு முகம் மின்னி மறைந்தது.அதை நான் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. மாலை செய்தித்தாளில் அந்தச் செய்தியைப் பார்க்கும் வரை. அதில் விபத்தில் இறந்த ஒரு இளைஞனின் புகைப்படம் வந்திருந்தது.. அவன் காலை என் மூளைக்குள் மின்னிய முகத்துக்கு சொந்தக்காரன்!அன்று முழுவதும் இது என் மனதைக் குடைந்து கொண்டேயிருக்க, அப்புறம் அதை மறந்துவிட்டேன்.இரண்டு நாட்கள் கழித்து மறுபடி மனசுக்குள் ஒரு காட்சி.எனக்குப் பின்னே வரும் யாரோ ஒருவனுக்கு வலது கால் துண்டாகி.... அவ்வளவுதான் அந்தக் காட்சி. ச்சே. முகமெல்லாம் தெரியவில்லை.அன்று முழுவதும் எனக்கு குழப்பமாகவே இருந்தது. பிறகு ஊரிலிருந்து என் நண்பன் வரவே அதை மறந்து அவனோடு அரட்டையடித்துக் கொண்டிருந்துவிட்டு, வெளியே கடைத் தெருவுக்குப் போனோம்.டாஸ்மாக்கிலேயேவா, வாங்கி வீட்டுக்குப் போகலாமா என்று குழப்பப் பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கும்போதே கொஞ்ச தூரத்தில் ஏதோ விபத்து நிகழ கூட்டம் கூட ஆரம்பித்தது. பார்க்க ஓடிப்போய் திரும்பிவந்த நண்பனிடம் கேட்டேன்..“என்னாச்சுடா... கால் போச்சா?” என்ற என்னை வியப்பாய்ப் பார்த்து திரும்பத் திரும்பக் கேட்டான் “எப்படிடா சொன்ன?” என்று. நான் எதுவுமே சொல்லவில்லை. எனக்கு பயம் வர ஆரம்பித்தது.இதென்ன ஈ.எஸ்.பி. என்பார்களே.. அந்த மாதிரி எதாவதா? இருந்து தொலைக்கட்டுமே, நல்ல விஷயமாய் இருந்தாலென்னவாம்?அதற்குப்பிறகு கடந்த இரண்டு, மூன்று மாதங்களில் ஒன்றிரண்டு சம்பவங்கள். எல்லாமே நடந்துவேறு தொலைக்கிறது.சரி.. இப்போது இன்றைய குழப்பத்திற்கு வருவோம்.இன்று அதிகாலை கனவுக்குள் கண்ட காட்சி...நான் என் அறையை விட்டு இறாங்கி நடக்கிறேன். எனக்கு எதிரே வரும் உருவம் மீது, பின்னாலிலிருந்து வந்த லாரி மோதப்பட்டு... தூக்கி எறியப்பட....அந்த முகமும், உடலும் எனக்கு மிகப் பரிச்சயமானது. ஆனால் உற்று கவனிக்குமும் கனவு கலைந்துவிட்டது.நான் உடனேயே உடம்பு உதற எழுந்து, இதோ இந்த ஐந்து மணிவரை வெளியில் செல்வதா வேண்டாமா என்று குழம்பிக் கொண்டிருக்கிறேன்.இன்று சினிமாவுக்குப் போகலாம் என்று அழைத்த நண்பன் வந்தால், புறப்பட்டுப் போகலாம், நடப்பது நடக்கட்டும். இது மட்டும் நடந்துவிட்டால்.. இனி மறைக்கக் கூடாது. ஒரு நல்ல சைக்காட்ரிஸ்ட்டைப் பார்த்து எல்லா விஷயத்தையும் சொல்லி சிகிட்சை எடுக்க ஆரம்பிக்கலாம். பிறகு பத்திரிகைகளுக்கும் விஷயத்தைத் தெரிவித்துவிடவேண்டும்.இந்தத் தீர்மானத்தில் நான் இருக்க.. இதோ வந்துவிட்டான் என் நண்பன்.“டேய்.. புறப்படுடா. மணி அஞ்சாயிடுச்சு. இன்னும் கிளம்பலியா?”“வர்றேன்” என் பதட்டம் மறைத்துச் சொன்னேன்.“சரி.. ட்ரெஸ் மாத்து. ஆமா, பக்கத்துல சலூன் வரப் போகுதா?”“ஆமா, யுவர்ஸ் ஹேர் ட்ரஸ்ஸர்ஸ்-ன்னு அடுத்த தெருவுல இருந்ததுல்ல. அதை இங்க ஷிப்ட் பண்றாங்க. ஏண்டா?” உடை மாற்றிக் கொண்டே கேட்டேன்.“இல்ல. சாமானெல்லாம் கொண்டு வந்துட்டிருக்காங்க. அதான் கேட்டேன். சரி கிளம்பு”என் எதிரில் வரப்போகும் துரதிருஷ்டசாலிக்கு அனுதாபம் தெரிவித்தபடி ரூம் பூட்டி குனிந்த தலையோடே தெருவில் இறங்கினேன்.எதுவோ வாகனச் சத்தம் க்றீச்சிட படாரெனத் தலை உயர்த்தினேன்...அடுத்த நொடி.. என் நண்பன் “டே......ய்” அலறலோடு என் கைபிடித்து இழுக்க, கை நழுவ, சுற்றி இருந்த சிலரின் திகில் பார்வையும் என்னைச் சூழ, நிலை தடுமாறிய லாரி ஒன்று என் பின்னால் இடித்து, முன் சக்கரத்தை உடம்பில் ஏற்றி....உயிர் பிரியும் கடைசி நொடியில் நான் கண்ட காட்சி..எனக்கெதிரில் வந்து கொண்டிருந்த இருவர் தூக்கிவந்த ஆளுயர நிலைக்கண்ணாடியைப் போட்டுவிட்டு என்னை நோக்கி ஓடிவந்ததுதான்.

No comments:

தமிழில் எழுதுங்கள்